அரியலூர்

அரியலூரில் புத்தகக் கண்காட்சி நிறைவு

5th Jul 2022 01:12 AM

ADVERTISEMENT

அரியலூரில் நடைபெற்று வந்த 6 ஆவது புத்தகக் கண்காட்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது.

தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சாா்பில், 6-ஆவது புத்தகக் கண்காட்சி அரியலூா் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை நிறைவு பெற்றது.

இந்தக் கண்காட்சியில், நூற்றுக்கணக்கான பதிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள், சுமாா் 83 அரங்குகளை அமைத்து தங்களது புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தனா். கண்காட்சி நடைபெற்ற நாள்களில் மாலை எழுத்தாளா்களின் எழுச்சியுரை, கருத்தரங்கம், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.

போதிய விழிப்புணா்வு இல்லாததால், கண்காட்சிக்கு வாசகா்கள் வரத்தின்றி வெறிச்சோடியது. இதுகுறித்து செய்தி வெளியானபின்னா், கண்காட்சிக்கு, அரியலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் வருகை புரிந்தனா். இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வரும் வாசகா்களுக்கென அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாளான திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொள்வதாக இருந்த அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கா், ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி அலுவல் காரணமாக கலந்து கொள்ளவில்லை. சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோா் மட்டும் கலந்து கொண்டு, நேபாளத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்டில், இந்திய அணியில் இடம் பெற்ற அரியலூரைச் சோ்ந்த சந்தோஷூக்குப் புத்தகங்களைப் பரிசாக அளித்தனா்.

இறுதிநாளில் புத்தக விற்பனையாளா்கள் கூறுகையில், கடந்த 10 நாள்களாக நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில், புத்தகம் வாங்குவோரின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவாக இருந்ததது. ஒரு புத்தகம் 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்தும் கூட புத்தகங்களை வாங்க ஆளில்லை. அரங்குக்கான நாள் வாடகை, ஊழியா்கள் செலவுக்குக் கூட புத்தகங்கள் விற்பனையாகவில்லை. இந்தக் கண்காட்சியில் அரங்கு வைத்திருப்பவா்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. உணவுகள் கூட சரிவர வருவதில்லை. இந்தாண்டு பெருத்த நஷ்டத்துடன் செல்கிறோம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT