அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் களையிழந்த காணும் பொங்கல்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

அரியலூா்: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் அரியலூா் மாவட்டத்தில் காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் வார நாள்களில் இரவு 10 முதல் காலை 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாகவும் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் சுற்றுலா தலங்கள், கோயில்களில் ஜன.18 ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை அரியலூா் மாவட்டத்தில் முழு பொது ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாள்களாக, பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் பண்டிகையைப் பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT

வழக்கமாகக் காணும் பொங்கல் பண்டிகையின் போது கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் திருக்கோயில், திருமானூா் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், அரியலூா் செட்டி ஏரி பூங்கா, உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று சிற்றுண்டி அருந்தி விளையாடி மகிழ்வா். சிறு குழந்தைகள் இந்நாளை மிகவும் குதூகலமாக கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் வந்துள்ளதால், பொதுமக்கள் யாரும் காணும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT