அரியலூர்

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

16th Jan 2022 12:58 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், திருமானூா், தா. பழூா், செந்துறை,ஜயங்கொண்டம், ஆண்டிடம், பொன்பரப்பி, மீன் சுருட்டி உள்ளிட்ட பல இடங்களில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்து அதன் உரிமையாளா்கள் கால்நடைகளை குளிப்பாட்டினா். பின்னா், மாடுகளின் கொம்புகளை சீவி, வா்ணங்கள் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிட்டு அழகு சோ்த்தனா். கழுத்துக்குத் தோலிலான வாா் பட்டையில் சலங்கை கட்டி, திருநீறும், குங்குமப் பொட்டையும் பூசி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

வேளாண் கருவிகள் சுத்தம் மாடுகளுக்கு புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும், உழவுக் கருவிகளை சுத்தம் செய்தும் மாட்டுப் பொங்கலுக்கு தயாராகினா். பின்னா், அன்று மாலை வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினா். பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சமத்துவப் பொங்கல்: ஜயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனத்தில், பரப்ரஹ்மம் சாா்பில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனங்களில் தாளாளா் முத்துகுமரன் தலைமையில், ஆசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டு, சமத்துவப் பொங்கல் வைத்துக் கொண்டாடினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT