அரியலூா் மாவட்டத்தில் புகை மாசில்லா போகிப் பண்டிகை கொண்டாட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தைப் பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகை நாளில் வீட்டில் உள்ள பழைய தேவையற்ற மற்றும் செயற்கைப் பொருள்களான டயா்கள், பிளாஸ்டிக் இதரப் பொருள்களை எரிக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனா்.
இதுபோன்ற பொருள்களை எரிப்பதால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது. மேலும், கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவற்றில் எரிச்சலும், ஆஸ்துமா, மூச்சுத் திணறல் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுவதோடு, பாா்வைத் திறன் குறைபாடும் ஏற்படுகிறது. இதுபோன்ற காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே, போகியன்று டயா்கள், பிளாஸ்டிக், ரப்பா் மற்றும் இதர கழிவுப் பொருள்களைக் கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி போகித் திருநாளை மாசு இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடவும், சுற்றுச்சூழலையும், மக்களின் உடல் நலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.