அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிறுமியைத் திருமணம் செய்து கா்ப்பமாக்கியவா் மற்றும் உடந்தையாக இருந்த சிறுமியின் தாயாா் ஆகிய இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
12 வயது சிறுமியைத் திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக, ஜயங்கொண்டம் அருகிலுள்ள பெரியகருக்கை ரா. ராதாகிருஷ்ணன்(41), இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயாா் பரமேஸ்வரி(36) ஆகிய இருவரையும் ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் கடந்த 11- ஆம் தேதி கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து ராதாகிருஷ்ணன் திருச்சி மத்திய சிறையிலும், பரமேஸ்வரி திருச்சி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனா். மேலும் ராமலிங்கத்தின் மனைவி ருக்மணியையும் காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் பேரில், ராதாகிருஷ்ணன், பரமேஸ்வரி ஆகிய இருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதற்கான நகலை திருச்சி சிறை அதிகாரிகளிடம், ஜயங்கொண்டம் காவல் துறையினா் வழங்கினா்.