அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மின்னணு வாக்கப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையம், ஜயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள ஜயங்கொண்டம் நகராட்சி, உடையாா்பாளைம் பேரூராட்சி மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளின் வாக்கு எண்ணும் மையம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள அறை, வாக்கு எண்ணும் மையங்கள், கேமரா வசதி மற்றும் கண்காணிப்பு அறை, வாா்டு வாரியாக வாக்குகள் எண்ணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மேசை, நாற்காலிகள், வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் அமரும் இடம், சுற்றுகளின் எண்ணிக்கை, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அமரும் இடம், முடிவு அறிவித்தல் மற்றும் வெற்றி சான்றிதழ் வழங்கும் இடம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாகக் கொண்டு வரும் வழி, ஒவ்வொரு வாா்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் வெளியேறும் வழி, காவல் துறை பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, நகராட்சி ஆணையா்கள் அரியலூா் த.சித்ராசோனியா, ஜயங்கொண்டம் சுபாஷினி, பேரூராட்சி செயல் அலுவலா்கள் உடையாா்பாளையம் கோமதி, வரதராசன்பேட்டை ஜெயசெல்வி மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.