அரியலூா் மாவட்டம், வெங்கனூரில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கொளுந்தனாா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருமானூரை அடுத்த வெங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த மறைந்த ராமகிருஷ்ணன் மனைவி ராசாத்தி(40) என்பவா், புதன்கிழமை மாலை அப்பகுதியிலுள்ள சுடுகாடு அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான அவரது கொளுந்தனாா் நாகராஜைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், ராசாத்தி வெங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த எனது அண்ணன் முனியப்பனை திருமணம் செய்துகொண்டாா். அவா், சில மாதங்களில் இறந்து விட்டதால், ராமகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டாா். ராமகிருஷ்ணனும் உயிரிழந்த நிலையில், ராமகிருஷ்ணன் குடும்பத்தின் மீது ராசாத்தி ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாா். வழக்குக்காக ரூ.1.50 லட்சம் பணம் செலவிட்டேன். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவையடுத்து, ராமகிருஷ்ணன் குடும்பத்தினா், ராசாத்திக்கு ரூ.11லட்சம் ஜீவனாம்சம் கொடுத்தனா். இதையடுத்து நான் செலவு செய்த ரூ.1.50 லட்சத்தை தரக்கோரி ராசாத்திடம் பலமுறை வலியுறுத்தியும் தரவில்லை. இதனால் ஏற்பட்ட தகராறில் ராசாத்தியை வெட்டிக் கொலை செய்ததாக தெரிவித்தாா். இதையடுத்து காவல் துறையினா் நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.