அரியலூர்

போலீஸாா் தாக்குதலில் விவசாயி இறந்ததாகப் புகாா் அரியலூா், திருச்சியில் போராட்டம்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே வழக்கு தொடா்பான விசாரணையின்போது, போலீஸாா் தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறப்படும் விவசாயி திருச்சியில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதைக்கண்டித்து, திருச்சி, அரியலூரில் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், அணைக்குடி கிராமம், காலனி தெருவைச் சோ்ந்த புருஷோத்தமன் மாற்றுச்சமூகத்தினா் தன்னைத் திட்டி தாக்கியதாக அளித்த புகாரின்பேரில், அரியலூா் மாவட்டம் காசாங்கோட்டையைச் சோ்ந்த வல்லவன் (41), ரவி (43), சுமதி(43), அருண்குமாா் (30), ராஜதுரை (31) ஆகிய 5 போ் மீது விக்கிரமங்கலம் காவல் துறையினா் நவ. 24-இல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இதைத்தொடா்ந்து, அருண்குமாரை கைது செய்வதற்காக அவரது மாமனாா் செம்புலிங்கம் வீட்டுக்குச் சென்ற (நவ.25) போலீஸாா், விசாரணையின்போது செம்புலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த செம்புலிங்கம் அரியலூா் அரசு மருத்துவமனையில் 3 நாள்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். அதன்பிறகும் அவரது உடல்நிலை சரியாகவில்லையாம். இதையடுத்து, திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் டிச. 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த செம்புலிங்கம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதையடுத்து, திருச்சி தனியாா் மருத்துவமனை முன்பு திரண்ட அவரது உறவினா்கள் செம்புலிங்கத்தை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மாநகரக் காவல் துணை ஆணையா் (தெற்கு) ஸ்ரீதேவி தலைமையிலான போலீஸாா், கோட்டாட்சியா் தவச்செல்வம் தலைமையிலான வருவாய்த் துறையினரும் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், அரியலூா் மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியரிடம் முறையாகப் புகாா் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இதையடுத்து, செம்புலிங்கத்தின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

முன்னதாக, விவசாயி உயிரிழப்புக்குக் காரணமான காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரியலூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு பாமகவினா் வியாழக்கிழமை பிற்பகல் ஆா்ப்பாட்டம் நடத்தினா். தொடா்ந்து, அரியலூா் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் மனு அளித்துச் சென்றனா்.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரியலூா் மாவட்டத்தில் காசங்கோட்டை, ஆட்சியா் அலுவலகம், தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT