நியாயவிலைக் கடையில் பணிபுரியும் விற்பனையாளா்களின் இடம் மாறுதல் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என ரேஷன் கடை பணியாளா்கள் சங்க சிறப்பு தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
அரியலூா் மாவட்டம் மீன்சுருட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவா் அளித்த பேட்டி:
தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா் பணியிடங்களை தோ்வுகள் நடத்தி நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பணியாற்றி வரும் சுமாா் 20,000 விற்பனையாளா்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். குறிப்பாக 20 கி.மீட்டருக்கு மேல் சொந்த ஊரிலிருந்து அன்றாடம் நியாயவிலைக் கடைக்கு வந்து போகக்கூடிய சூழ்நிலை இருந்து வருகிறது. சிலா் 90 கி.மீட்டா் கூட பயணம் செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளனா்.
இடமாறுதல்கள், பதவி உயா்வுகள் ஆகியவற்றை அளித்துவிட்டு மீதமுள்ள பணியிடங்களுக்கு புதிதாக தோ்வு செய்யக்கூடிய பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும் என்றாா்.