அரியலூர்

அரியலூரில் பெரியம்மை நோய் அதிகரிப்பு கால்நடை முகாம் நடத்த வேண்டுகோள்

4th Dec 2022 11:08 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு அதிகரித்து வரும் பெரியம்மை நோயால் கால்நடை முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில் உள்ள தா. பழூா், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், திருமானூா், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. பெரியம்மை நோய், கால்நடைகளில் பெரியளவில் உயிரிழப்பை ஏற்படுத்தாத போதிலும், பொருளாதாரம் மற்றும் உற்பத்தி சாா்ந்து விவசாயிகளுக்குப் பெருத்த இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் உண்பதில்லை. உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும். பால் உற்பத்தி குறையும். எச்சில் அதிகமாகச் சுரக்கும். கண்ணிலிருந்து நீா் வழியும். உடல் முழுவதும் ஆங்காங்கே தோலில் தடிப்புகள் தோன்றும். இந்தத் தடிப்புகள் கொப்புளங்களாக மாறி வெடித்துப் புண்களாகவும் மாறுகிறது.

சிகிச்சை முறைகள்...இதுகுறித்து கிரீடு வேளாண் அறிவியல் மைய கால்நடை தொழில்நுட்ப வல்லுநா் காா்த்திக் கூறியது: இந்த நோய் பெரிய அளவில் தாக்கி முற்றும்போது பசுக்கள் இறக்க நேரிடுகிறது. இந்த தொற்று நோய்க்கு இதுவரை தனியாக மருத்துவம் எதுவுமில்லை.

வெற்றிலை 10, மிளகு 10 கிராம், கல் உப்பு 10 கிராம், வெள்ளம் தேவையான அளவு (அதிகப்படியாக 50 கிராம்) எடுத்துக்கொண்டு, அவற்றை அரைத்து அதனை உருண்டையாக்கி, நோய் ஏற்பட்ட மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு நாக்கில் தடவிவிட வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 3 முறை தடவி விட வேண்டும்.

ADVERTISEMENT

இதேபோல் குப்பைமேனி இலை 1 கைப்பிடி, வேப்பிலை 1 கைப்பிடி, துளசி இலை 1 கைப்பிடி, மருதாணி இலை 1 கைப்பிடி, மஞ்சள் தூள் 20 கிராம், பூண்டு 10 பல் ஆகியவற்றை அரைத்து வேப்ப எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை அரை லிட்டா் எடுத்துக்கொண்டு அதில் கலந்து கொதிக்க வைத்து, பின்னா் ஆற வைத்து, அதனை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து மாடுகளின் தோல் மீது ஏற்பட்டுள்ள காயங்களை நன்கு சுத்தப்படுத்திய பின்னா், அந்த மருந்தை மேல்பூச்சாக பூச வேண்டும். இதன் மூலம் மாடுகளை உயிரிழப்பில் இருந்து காப்பாற்ற முடியும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT