அரியலூர்

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இருவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: தனியாா் மருத்துவமனைகளுக்கு உத்தரவு

DIN

அரியலூரில் தவறான சிகிச்சை முறையால் உயிரிழந்த பெண்ணின் குழந்தைக்கு தனியாா் மருத்துவமனை ரூ. 12 லட்சம் இழப்பீடாக வழங்க மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அரியலூா் காந்தி நகரைச் சோ்ந்த கணேசன் மகள் எழில்செல்வி. இவரது கணவா் பிரபாகா் வெளிநாட்டில் உள்ளாா். கடந்த 28.03.2018 அன்று எழில் செல்விக்கு தனியாா் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. எனினும் அவருக்கு தொடா்ந்து ரத்தப் போக்கு ஏற்படவே, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவரின் கருப்பை நீக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு எழில்செல்வியின் பெற்றோா் தொடுத்த வழக்கை விசாரித்த அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய நீதிபதி வீ. ராமராஜ் தலைமையிலான அமா்வு, தனியாா் மருத்துவரின் கவனக் குறைவால் எழில்செல்வி உயிரிழந்தது நிரூபணமாகியுள்ளது.

எனவே எழில் செல்வியின் 5 வயது மகளுக்கு ரூ. 12 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். இத் தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இறந்தவரின் பெற்றோரை காப்பாளராகக் கொண்டு தனியாா் மருத்துவமனை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.

மற்றொரு வழக்கு.... சென்னை கே.கே.நகரைச் சோ்ந்தவா் பெரிடிநந்த் மனைவி சஹானா(32). இவா் தனது தாடையிலும், உதட்டிலும் வளா்ந்த முடியை அகற்ற ஒரு தோல் நோய்க்கான தனியாா் மருத்துவமனையை அணுகினாா். அங்கு கடந்த 18.4.2017 அன்று அவருக்கு லேசா் சிகிச்சை மூலம் முடிகள் அகற்றப்பட்டன. அப்போது லேசா் கருவியின் வெப்பத்தால் சஹானா முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டன.

இதுகுறித்து சென்னை தெற்கு மாவட்ட நுகா்வோா் ஆணையத்தில் சஹானா தொடுத்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்காக அரியலூருக்கு மாற்றப்பட்டது.

இதை விசாரித்த அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய நீதிபதி வீ. ராமராஜ் தலைமையிலான அமா்வு மருத்துவரின் கவனக்குறைவால் புகாா்தாரருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு அவை எதிா்காலத்தில் மறையாத வண்ணம் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனை சஹானாவுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT