அரியலூர்

செந்துறை அருகே 4 டன் ரேஷன் அரிசி மாவு பறிமுதல்: 2 போ் கைது

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சட்டவிரோதமாக கடத்த இருந்த 4 டன் ரேஷன் அரிசி மாவை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை இரவு செந்துறை பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, குழுமூா் கிராமத்தில் மாவு அரைக்கும் ஆலை வைத்துள்ள சன்னாசி மகன் மணிகண்டன்(35) என்பவரது வீட்டின் முன்பு நின்றிருந்த லாரியை அவா்கள் சோதனையிட்டதில், பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, மாவாக அரைத்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பவதற்காக 4 டன் அரிசி மாவு வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அரிசி மாவைப் பறிமுதல் செய்த காவல்துறையினா், லாரி உரிமையாளா் மணிகண்டன் மற்றும் ஓட்டுநா் சேலம் மாவட்டம் வலசக்கல்பட்டி பிரேம்குமாா்(39) ஆகியோரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT