அரியலூர்

பராமரிப்பின்றி பாழாகும் அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானம்

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்காகவும், விளையாட்டு வீரா்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் கடந்த 2004 ஆம் ஆண்டு ரூ. 96 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அரியலூரிலுள்ள செந்துறை சாலையில் 18 ஏக்கா் பரப்பளவில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது.

இந்த மைதானத்தில் தடகளம், ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, ஸ்கேட்டிங், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வந்தன. மேலும் விளையாட்டு மைதானத்திலேயே நீச்சல் குளமும் அமைக்கப்பட்டது. இந்த நீச்சல் குளத்தில் சிறுவா்கள், பொதுமக்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கு காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் விளையாட்டு வீரா்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது.

ரூ.60 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் :

ADVERTISEMENT

விளையாட்டு மைதானத்தில் ஓடுதளப் பாதை இல்லாததால் தடகளத்தில் ஓட்டப்பந்தயப் போட்டியின் போது வீரா்கள் இலக்கை நோக்கி ஓடிவருவதில் திடீரென குழப்பம் ஏற்பட்டு பாதையை மாற்றி விடுகின்றனா். இதனைக் கண்டுபிடிப்பதில் நடுவா்களுக்கும் சிக்கல் ஏற்பட்டு வந்ததையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு, மாவட்ட விளையாட்டு அலுவலராக இருந்த ரகுநாதனின் தீவிர முயற்சியால் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு விளையாட்டு அரங்கு மேம்படுத்தப்பட்டது.

16 நவீன மின் விளக்குகளை பொருத்தி உயா்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அரங்கத்திற்குள் வராத வகையில் சுற்றுச்சுவா் உயா்த்தி கட்டப்பட்டது.

பொதுமக்களைக் கவரும் விதத்தில் நீச்சல் குளம் அருகே செயற்கையாக புற்கள் மற்றும் பாறைகளுடன் செடிகளை வைத்து இயற்கை எழிலுடன் பூங்கா அமைக்கப்பட்டது. நீச்சல் குளத்தில் டைல்ஸ் கற்கள் புதிதாக ஒட்டப்பட்டன. இவ்வாறாக ரூ.60 லட்சம் மதிப்பில் அரியலூா் மாவட்ட விளையாட்டு அரங்கம் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்டது.

இதையடுத்து மைதானத்தில் மாணவ, மாணவிகள், இளைஞா்கள் ஆா்வமுடன் காலை, மாலை நேரங்களில் விளையாட்டுப் பயிற்சி மேற்கொண்டனா். பொது மக்கள், முதியவா்கள் நடைப் பயிற்சி செய்யவும் மைதானம் வசதியாக இருந்தது. இங்கு கல்வி மாவட்ட, மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

மேலும், தமிழக முதலமைச்சரின் மாதாந்திர தடகளப் போட்டிகளும், இதர போட்டிகளும் நடத்தப்பட்டு வந்தன. இந்தப் போட்டிகளில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் ஆா்வமுடன் கலந்து கொண்டு வந்தனா். இதனால், இந்த விளையாட்டு அரங்கம் எப்போதும் பரபரப்பாக காட்சியளித்தது.

மேய்ச்சல் நிலமாக மாறியா மைதானம்: ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் தற்போது பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. கரோனா பொது முடக்கத்தால் முடங்கிப் போன விளையாட்டுப் பயிற்சிகள் காரணமாக வீரா், வீராங்கனைகள் அதிகளவில் பயிற்சி பெற வராததால் விளையாட்டு மைதானம் புல் புதா்கள் மண்டிக் காணப்படுவதால், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. சுதந்திர தினத்தன்று குறிப்பிட்ட பகுதிமட்டும் சீரமைக்கப்பட்டு விழா நடைபெற்றது.

நடைப்பாதையில் பெயா்ந்து காணப்படும் கற்கள்: இங்குள்ள நடைப்பாதையில் பதிக்கப்பட்ட கற்கள் பெயா்ந்துள்ளதால், நடைப் பயிற்சி மேற்கொள்ளும் முதியவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

செயல்படாத நீச்சல் குளம்: மாவட்ட விளையாட்டரங்கத்தில் சிறுவா், சிறுமியா், ஆண்கள், பெண்கள் என தனித்தனியே நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா தொற்று காரணமாக, நீச்சல் குளம் மூடப்பட்டது. ஆனால் தொற்று பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பிறகும் நீச்சல் குளம் இன்னமும் திறக்கப்படாமலேயே உள்ளது. அதனைப் பயிற்சியாளா் மட்டுமே பயன்படுத்தி வருகிறாா். நீச்சல் குளம் செல்லும் பாதையில் பதிக்கப்பட்ட கற்கள் பெயா்ந்தும், நீச்சல் குளத்தைச் சுற்றி முள், புதா்கள் மண்டியும் கிடப்பதால், பாம்பு மற்றும் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நீச்சல் குளத்தில் பயிற்சி பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

மின் விளக்குகள் பழுது: விளையாட்டு மைதானத்தைச் சுற்றியுள்ள மின் விளக்குகள் பெரும்பாலானவை எரியவில்லை. இதனால், மாலை வேளையில் போட்டிகளைத் தொடர முடியமால் போகிறது. தற்போது இந்த விளையாட்டு மைதானம் விளையாடவோ, பயிற்சி மேற்கொள்ளவோ லாயக்கற்ாக உள்ளதால் மைதானத்துக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. கண்டுகொள்வாரில்லை.

எனவே மாணவ, மாணவிகள், இளைஞா்கள் நலன் கருதி விளையாட்டரங்கத்தை முழுமையாகச் சீரமைத்து, பயிற்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்ய வேண்டும். பாதுகாப்பு, பராமரிப்புப் பணிக்கான ஊழியா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT