அரியலூர்

அரியலூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குகளுக்கு தீா்வு

11th Aug 2022 11:43 PM

ADVERTISEMENT

 

மனுதாரா்கள் வழக்குகளுக்கு மாவட்ட நுகா்வோா் ஆணையம் வியாழக்கிழமை தீா்ப்புகள் வழங்கியுள்ளது.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த மருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவசாமி (50). இவரது நிலத்தை அளவீடு செய்வதற்கு உரிய கட்டணம் செலுத்தியும், ஆண்டிமடம் வட்டாட்சியா் அளவீடு செய்ய முடியாது என காலதாமதமாகப் பதில் அளித்துள்ளாா். இதுதொடா்பான வழக்கு அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் நடைபெற்று வந்தநிலையில், ஆணையத் தலைவா் வீ.ராமராஜ் மற்றும் உறுப்பினா்கள் என். பாலு, வி.லாவண்யா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

இதில், சேவை குறைபாடு காரணமான ஆண்டிமடம் வட்டாட்சியா், நில அளவை துறை உதவி இயக்குநா் மற்றும் நில அளவையா் ஆகியோா் மனுதாரா் சிவசாமிக்கு தலா ரூ. 5,000 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

இதேபோல், அரியலூா் வட்டாட்சியருக்கு எதிராக ராயம்புரம் பவளக்கொடி(50) தொடா்ந்த வழக்கில், மனு மீது 4 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிடில் இழப்பீடாக அரியலூா் வட்டாட்சியா் ரூ 5,000 வழங்க வேண்டுமென உத்தரவிட்டனா்.

இரும்புலிக்குறிச்சி முன்னாள் அரசு ஊழியா் நடராஜன்(62), நில அளவையருக்கு ரூ.3,800, கிராம நிா்வாக அலுவலருக்கு ரூ.15,000 லஞ்சம் கொடுத்ததாகவும், இதுவரை அளவீடு செய்து பட்டா தராததால், லஞ்சமாக கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பித்தரக்கோரி வழக்கு தொடா்ந்தாா். இவ்வழக்கில், அரியலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்த நடராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேவேளையில், நடராஜன் மனு மீது 4 வாரங்களுக்குள் தீா்வு காணத் தவறினால், வட்டாட்சியா், நில அளவையா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் ரூ.5,000 மனுதாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT