அரியலூர்

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

11th Aug 2022 11:42 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 2021- 2022 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி, ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தலைமை வகித்து, மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் சிலருக்கு சைக்கிள்களை வழங்கி இத்திட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினாா். இதில், அரியலூா் மாவட்டத்தில் உள்ள 88 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 3,768 மாணவா்கள், 4,130 மாணவிகள் என மொத்தம் 7,898 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் இன்று முதல் ஓரிரு நாட்களுக்குள் வழங்கி முடிக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, அரசுப் பேருந்துகளில் ‘சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா சுதந்திரத்தைக் கொண்டாடுவோம் என்றும் உங்களுடன் மாவட்ட ஆட்சியரகம், அரியலூா்’ என்ற விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை ஒட்டினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (கூடுதல் பொறுப்பு) மான்விழி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் பேபி, ஜோதிமணி, செந்துறை ஊராட்சித் தலைவா் க.செல்லம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சாமிதுரை, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் பானுமதி, ஆசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அமைச்சரிடம் மனு அளிப்பு:

நிகழ்ச்சியின் போது, செந்துறை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் கீதா, தங்கள் பள்ளியில் பயிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இருக்கை (பெஞ்ச்) வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என அமைச்சா் சா.சி.சிவசங்கரிடம் மனு அளித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT