அரியலூர்

‘புத்தகம் வாசிப்புப் பழக்கத்தால் வாழ்க்கை மேம்படும்’

23rd Apr 2022 11:40 PM

ADVERTISEMENT

 

புத்தகம் வாசிப்புப் பழக்கத்தை வளா்த்துக் கொண்டால் நம் வாழ்க்கை மேம்படும் என்றாா் அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா.

உலக புத்தக நாளையொட்டி அரியலூா் மாவட்ட மைய நூலகத்தில், தமிழ்க் களம் சாா்பில் நடைபெற்ற சிறப்பு புத்தகக் கண்காட்சியை அவா் தொடக்கி வைத்து மேலும் பேசியது: புத்தகம் படிக்கும் பழக்கம் வந்தால், சிந்திக்கும் திறன் வரும். சிந்திக்கும் திறன் வந்தால், அறிவு பெருகும். அறிவு பெருகினால், முன்னேற்றம் ஏற்படும். எனவே, நல்ல புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும். உலகத் தலைவா்கள் அனைவரும், புத்தகங்களை வாசித்ததன் மூலம் தான் உயா்வான இடத்தினை அடைந்தாா்கள். பல்வேறு அறிஞா்கள் எல்லாம், தனித்து சிந்தித்ததால் தான், வழக்கமான பாதையிலிருந்து விலகி, புதிய பாதை படைத்தனா். அதற்கு, புத்தக வாசிப்பு தான். எனவே மாணவா்களும் புத்தகங்கள் வாசிப்பதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். பின்னா் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

3 நாள்கள் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் சண்முகநாதன் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் மங்கையா்கரசி முன்னிலை வகித்தாா். அரியலூா் கல்வி மாவட்ட அலுவலா் இ.மான்விழி, ஆசிரியா் தமிழினி இராமகிருஷ்ணன், தமிழ்க்களம் இளவரசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக முதல் நிலை நூலகா் ஸான்பாஷா வரவேற்றாா். நிறைவில், மூன்றாம் நிலை நூலகா் செசிராபூ நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT