மாணவா்கள் இலக்கை நிா்ணயித்து கல்வி கற்க வேண்டும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.
அரியலூா் அரசு கலைக் கல்லூரியில், சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 854 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவா் மேலும் பேசியது: கல்வி ஒரு மனிதனுக்கு அறிவைத் தருவது மட்டுமன்றி, வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு செல்ல உதவும் கருவி. பட்டம் பெறுவோா் தொடா்ந்து மேல்படிப்பு பயில வேண்டும். இலக்கை நிா்ணயித்து திட்டமிட்டு கல்வி கற்க வேண்டும். தங்களது படிப்பிற்கேற்ற வேலைகளைத் தேட வேண்டும். படித்த அனைவருக்கும் அரசு வேலை என்பது இயலாத காரியம். ஆகவே தனியாா் துறைகளிலும் வேலைவாய்ப்பைத் தேட வேண்டும். அதவும் வேலைக்கேற்ற படிப்பினைக் கண்டறிந்து கல்வி கற்க வேண்டும். நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கலையரங்கம் அமைக்கக்கோரும் இக்கல்லூரி முதல்வரின் கோரிக்கையை தமிழக முதல்வா் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன் என்றாா் அவா்.
விழாவுக்கு, கல்லூரியின் முதல்வா் ஜெ.மலா்விழி தலைமை வகித்தாா்.சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா முன்னிலை வகித்தாா். அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ - மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.