பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டியில், அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ் ஆலையின் ஐஎன்டியுசி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், தொழிலாளா்களுக்கு கடந்த 2020-2021 வழங்க வேண்டிய போனஸ் மற்றும் ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஆலையின் உற்பத்தி பிரிவில் காலியாக உள்ள இடங்களில் தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தொழிலாளா்களின் வருடாந்திர மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.2 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆலையிலுள்ள சிற்றுண்டிகளில் நிரந்தர பணியாளா்களுக்கு வழங்கும் சலுகைகளை, ஒப்பந்த தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் செளந்தர்ராஜன் தலைமை வகித்தாா். ஐஎன்டியுசி மாநில துணைத் தலைவா் டி.வி.அம்பலவாணன், ஏஐடியுசி மாநில பொதுக் குழு உறுப்பினா் டி.தண்டபாணி ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.