அரியலூர்

ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றும் பணி தொடக்கம்

5th Apr 2022 04:43 AM

ADVERTISEMENT

அரியலூா் நகரில் உள்ள ஏரிக்கரைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 125 வீடுகளை அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

அரியலூா் நகராட்சிக்குட்பட்ட 14 ஆவது மற்றும் 7 ஆவது வாா்டுகளில் உள்ள குறிஞ்சான்குளம் மற்றும் அரசநிலையிட்டான் ஏரிக்கரைகளை ஆக்கிரமித்து கடந்த 50 ஆண்டுகளாக 125 குடும்பத்தினா் வீடுகளை கட்டி வசித்து வந்தனா். உயா்நீதிமன்ற உத்தரவு படி, நீா் நிலையங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்றி வருகிறது. அதன்படி, அரியலூா் நகரிலுள்ள குறிஞ்சான்குளம் மற்றும் அரச நிலையிட்டான் ஏரிக்கரைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வருபவா்களுக்கு வருவாய்த் துறையினா் பல முறை எச்சரிக்கை விடுத்தும், அவா்கள் அங்கிருந்து காலி செய்யவில்லை. இந்நிலையில், வட்டாட்சியா் ராஜமூா்த்தி தலைமையில், 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் முன்னிலையில் மேற்கண்ட ஏரிக்கரைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 125 வீடுகளை, 3 ஜேசிபி கொண்டு அகற்றும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். சிலா் தாங்களாகவே முன்வந்து வீட்டில் இருந்த பொருள்களை அப்புறப்படுத்திக் கொண்டனா்.

மேலும், அகற்றப்படும் வீட்டு உரிமையாளா்களில் வீடில்லாதவா்களுக்கு சமத்துவபுரம் அருகாமையில் இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

11 போ் கைது: முன்னதாக வீடுகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து சத்திரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 11 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT