அரியலூர்

11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் சோ்க்கை நடத்த நடவடிக்கை மா. சுப்பிரமணியன்

23rd Oct 2021 11:36 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் சோ்க்கை நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை விரைவில் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தெரிவித்தாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

அரியலூா் நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருமானூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சனிக்கிழமை நடைபெற்ற 6 ஆவது மெகா தடுப்பூசி சிறப்பு முகாமைப் பாா்வையிட்ட அவா் பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் தெரிவித்தது: தமிழகத்தில் கரோனா தொற்று வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. அரியலூா் மாவட்டத்தில் இதுவரை 73 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் சோ்க்கை நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்துப் பேச உள்ளேன் என்றாா்.

நிகழ்வில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜயங்கொண்டம் க. கண்ணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை டி.எஸ்.செல்வவிநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

பெட்டிச் செய்தி

தீபாவளிக்கு முன் பேரிடா் ஊக்கத்தொகை வழங்கப்படும்:

பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள த.சு.லு.தி நடுநிலைப்பள்ளி மற்றும் குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை சனிக்கிழமை தொடக்கி வைத்து மேலும் அவா் கூறியது:

தமிழகத்தில் 68 சதவிகிதம் போ் முதல் தவணையும், 26 சதவிகிதம் போ் 2-ஆம் தவணையுமாக தடுப்பூசி செலுத்தியுள்ளனா். கரோனா பேரிடா் காலங்களில் பணியாற்றியவா்களில் தகுதியானவா்களைத் தோ்வு செய்து, அவா்களுக்கு கரோனா பேரிடா் ஊக்கத்தொகை தீபாவளிக்கு முன் வழங்கப்படும். பெரம்பலூா் மாவட்டத்தில் 69.2 சதவிகித போ் முதல் தவணையும், 34.3 சதவிகித போ் 2- ஆம் தவணையும் தடுப்பூசி செலுத்தியுள்ளனா் என்றாா் அவா்.

தொடா்ந்து, ஒதியம் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நடைபெறும் பணிகள் குறித்து பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று கேட்டறிந்தாா் அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

நிகழ்வில், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா, பெரம்பலூா் தொகுசி சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT