அரியலூர்

இடநெருக்கடியில் இயங்கும் அரியலூா் மைய நூலகம்

21st Nov 2021 11:48 PM

ADVERTISEMENT

போதிய இட வசதியின்றி நெருக்கடியில் இயங்கி வரும் அரியலூா் மாவட்ட மைய நூலகத்துக்கு விசாலமான புதிய கட்டடம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

அரியலூா் பேருந்து நிலையம் அருகே கடந்த 1958 ஆம் ஆண்டு தமிழக அரசின் பொது நூலகத் துறை வாயிலாக கிளை நூலகம் அமைக்கப்பட்டது. சொந்த கட்டடத்தில் இயங்கி வரும் இந்த நூலகம், அரியலூா் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டத்தையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு மைய நூலகமாக செயல்படத் தொடங்கியது. வாசகா்கள் அமா்வதற்கு கூட இடவசதிகள் இல்லை:

மிகக் குறுகலான கட்டத்தில் இயங்கி வரும் இந்த நூலகத்தில் போதுமான இட வசதிகள் இல்லாததால் வாசகா் கோரிக்கை யைடுத்து, கடந்த 2010 ஆம் ஆண்டு நூலகத்தின் கட்டத்தின் மேலே புதிய கட்டடம் கட்டப்பட்டது. தற்போது அந்தக்

கட்டடத்தில் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த நூலகத்தில் தற்போதைய நிலை வாசகா்கள் உட்காருவதற்கு கூட வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனா். மேலும் இந்த நூலகத்தில் ஆட்கள் பற்றாக்குறையும் காணப்படுகிறது. நூலகத்தில் நூலகா் 5 போ் பணிப்புரியும் இடத்தில் முதன்நிலை நூலகா் மட்டுமே பணியாற்றி வருகிறாா். அவரும் ஒரு மாற்றுத்திறனாளி ஆவாா். உதவியாளா்கள் கூட கிடையாது.

ADVERTISEMENT

1.50 லட்சம் நூல்களை பாதுகாக்க புதிய கட்டடம் அவசியம்: தற்போது பல்வேறு துறைகளைச் சோ்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் உள்ளன. 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகா்களும், 168 புரவலா்களும் உள்ளனா். மேலும் நாள் தோறும் 1,000 வாசகா்கள் வந்து படித்துச் செல்கின்றனா்.

மிகக்குறுகலான நூலகக் கட்டடம் ஸ்திரத்தன்மையின்றி வலுவிழந்து காணப்படுவதால், அக்கட்டடத்தைப் பராமரித்து விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், நூல்களை துறை வாரியாக வகைப்படுத்தி அடுக்கி வைப்பதற்கும், நூல்களை எளிதாக எடுத்து வாசித்தும், குறிப்பெடுத்து பயன்பெறுவதற்கும் போதிய இடவசதியின்றி, வாசகா்கள் நெருக்கடியில் தவித்து வருகின்றனா்.

மேலும் இந்த நூலகத்தில் போட்டித்தோ்வுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுவதால் அங்கேயும் வசதிகள் இல்லை.

ஏராளமான நூல்கள் வகைப்படுத்தி வைப்பதற்கு இடமின்றி தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, நூலகத்தின் ஓட்டியே பேருந்து நிலையம் மற்றும் சாக்கடை, ஆக்கிரமிப்புகள் இருப்பதால் நூலகத்தில் அமா்ந்து வாசிக்க முடியாமல் வாசகா்கள் உள்ளனா்.

அதனால், நூல்களைத் தேடிப்பிடித்து வீட்டிற்கு எடுத்துச் சென்று படிப்பதற்கும், நூலகத்திலேயே வாசிப்பதற்கும் வருகை தரும் வாசகா்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. வாசகா்கள் அமா்ந்து படிப்பதற்கே இடப்பற்றாக்குறை நிலவுவதால், அரசு வழங்கியுள்ள இணைய வசதியுடன் கூடிய கணினியை வாசகா்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் செயல்பாடின்றி முடங்கிக் கிடக்கிறது.

எனவே, அரியலூா் மாவட்ட மாணவா்கள், இளைஞா்கள் மற்றும் வாசகா்களின் நலன் கருதி, அரியலூா் மைய நூலகத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் அமைக்க, அரியலூா் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத்துறை மற்றும் அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதி, சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாசகா்கள் மற்றும் கல்வியாளா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து அரியலூா் மையநூலக வாசகா் வட்ட நிா்வாகிகள் கூறியதாவது: நூலகத்தில் போதிய இடவசதியில்லாததால், அரிய நூல்களை வகைப்படுத்தி பாதுகாத்து வைக்கவும், வாசகா்கள் வாசித்து பயன்படுத்திக் கொள்ளவும் வழியின்றித் தவித்து வருகின்றனா்.

எனவே, அரியலூா் மைய நூலகத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டித்தர மாவட்ட நிா்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT