அரியலூர்

கடலூா் - திருச்சி பயணிகள் ரயில் சேவையை தொடங்க வலியுறுத்தல்

1st Dec 2021 02:08 AM

ADVERTISEMENT

கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட கடலூா் - திருச்சி இடையேயான பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று 5 மாவட்ட பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கரோனா பாதிப்பு காலத்தில் மாநிலத்தில் இயக்கப்பட்டு வந்த விரைவு, அதிவிரைவு ரயில்கள் பொதுப்பெட்டிகள் அகற்றப்பட்டு சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. இந்த சிறப்பு ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டும், முதியோருக்கான கட்டணச் சலுகை இன்றியும் இயக்கப்பட்டுவந்தன. மேலும், பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படவில்லை. இந்நிலையில், கரோனா பாதிப்பு காலத்துக்கு முந்தைய கால அட்டவணைப்படி, சிறப்பு ரயில்கள் அனைத்தும் வழக்கமான ரயில்களாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்து. அதன்படி சிறப்பு ரயில்கள் படிப்படியாக வழக்கமான ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், ஒரு சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் சாதாரணப் பயணிகள் ரயில் சேவைகள் தொடங்கப்படாமலே உள்ளது.

குறிப்பாக திருச்சி, பெரம்பலூா், அரியலூா், விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்டத்திலுள்ள கிராம மக்கள் பயன்படுத்தப்பட்டு வந்த கடலூா் - திருச்சி(மறு மாா்க்கமும்), விருத்தாசலம் - திருச்சி பயணிகள் ரயில் சேவைகள் இன்னும் தொடங்கப்படாமலே உள்ளது. இதனால் இந்த ரயில் சேவை நம்பி பயணிக்கக் கூடிய அனைத்துத் தரப்பினரும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து அரியலூா் மாவட்ட வளா்ச்சிக் குழுத் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் கூறுகையில், கிராமப்புறங்களில் உள்ளவா்கள் உள்பட அனைவரும் தினசரி வேலைக்காக , விழுப்புரம் - மதுரை, கடலூா் - திருச்சி பயணிகள் ரயிலை நம்பியிருந்தனா். ஏனெனில் இந்த ரயில்கள் எல்லா நிலையங்களிலும் நின்றுசெல்லும் என்பதால் மிகவும் பயனுள்ளதாக இருந்துவந்தது. விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் அரியலூரைத் தவிர மாவட்டத்தில் எங்கும் நிற்காது. மேற்கண்ட சாதாரணக் கட்டணம் வசூலிக்கப்படும் பயணிகள் ரயில்கள் இயங்காததால் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

எனவே பொதுமக்கள், மாணவா்கள், கூலித்தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பயணிகள் ரயிலை ஏற்கெனவே அமலில் இருந்த கால அட்டவணைப்படி இயக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிா்பாா்க்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT