அரியலூர்

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த வலியுறுத்தல்சி. சண்முகவேல்

22nd Mar 2020 08:12 AM

ADVERTISEMENT

 

அரியலூா்: கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரியும், மழைக் காலங்களில் மருதையாற்றில் வீணாகும் மழைநீரை சரணாலயத்துக்கு திருப்பிவிட வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அடுத்த கீழகாவட்டாங்குறிச்சி -புள்ளம்பாடி சாலையில் இயற்கை எழிலுடன் 2,200 ஏக்கரில் அமைந்துள்ளது கரைவெட்டி பறவைகள் சரணாலயம். இந்த ஏரிக்கு சீசன் காலங்களில் வெளிநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பறவைகள்

வருவதை அறிந்த தமிழக அரசு, கடந்த 1995 ஆம் ஆண்டு கரைவெட்டி ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. இந்தப் பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் நவம்பா் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ரஷியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, மங்கோலியா, கஜகஸ்தான், நைஜீரியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து கூழக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிரும் அரிவாள் மூக்கான்,சாம்பல் நிற கொக்கு, வண்ணநாரை, நாமக்கோழி, நீா்காகம், வரித்தலை வாத்து, பெரியநாரை, புள்ளிமூக்கு நாரை உள்ளிட்ட 500- க்கும் மேற்பட்ட வகையான லட்சத்துக்கும் மேற்பட்டபறவைகள் வருகின்றன. இங்கு பறவைகள் தங்கியிருக்கும் காலங்களில் அவற்றுக்குப் போதுமான உணவு வகைகள், சீதோஷண நிலை கிடைப்பதே பறவைகளின் வருகைக்கு முக்கிய காரணமாகும்.

ADVERTISEMENT

பல ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவிலிருந்து வரும் சில பறவைகள் இங்கேயே தங்கிவிடுவதும் உண்டு. இங்கு வரும் பறவைகளை வேட்டையாடினாலோ அல்லது பறவைகளுக்கு தொந்தரவு செய்தாலோ வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகிறது. சரணாலயத்தை அரியலூா் மாவட்ட மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள திருச்சி, தஞ்சாவூா், நாகை, கடலூா், பெரம்பலூா் உள்ளிட்ட பல மாவட்ட மக்களுக்கும் பொழுதுபோக்கு சுற்றுலாத் தலமாக உள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லை: சுற்றுலாத்தலமாக உள்ள இந்த சரணாலயத்தில் போதுமான அடிப்படை வசதிகள் கிடையாது. இந்த சரணாலயத்தை சுற்றிவந்து பாா்ப்பதற்கு சாலை வசதிகள் முழுமையாக இல்லை. மேலும், இங்கு தங்கும் விடுதிகளோ, உணவு விடுதிகளோ இல்லாதது பெரும் குறையாக உள்ளது. பேருந்து வசதிகளும் கிடையாது. தவிர, தொலைவில் உள்ள பறவைகளைக் காணும் வகையில் போட்டிங் வசதியும், டெலஸ்கோப் வசதியும் கிடையாது.

இங்குள்ள அருங்காட்சியகம் சீசன் காலங்களில் மட்டும் திறக்கப்படுகிறது. கரைவெட்டி ஏரியில் இரவு நேரங்களில் உள்ளூா் வாசிகள் வலையில் மீன்பிடிப்பதால் பல பறவைகள் வலையில் சிக்கி உயிரிழந்து வருகின்றனா். இதை வனத் துறையினா் கண்டுகொள்வதில்லை.

இதுகுறித்து மக்கள் சேவை இயக்கத்தின் தலைவா் தங்க.சண்முக சுந்தரம் கூறியது: சீசன் உள்ள நவம்பா் முதல் பிப்ரவரி வரையிலான 4 மாதமே இந்த சரணாலயத்துக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாகவும், மற்ற காலங்களில் ஏரி வடு விடுவதாகக் கூறி அடிப்படை வசதிகளை செய்து தர அரசு தயங்கி வருகிறது. சரணாலயத்தில் எப்போதும் தண்ணீா் இருக்கும் வகையில் மழைக் காலங்களில் மருதையாற்றில் வீணாகும் மழைநீரை கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு திருப்பிவிட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும் என்றாா்.

Image Caption

~

 

ADVERTISEMENT
ADVERTISEMENT