அரியலூர்

கீழப்பழுவூா் ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கருத்தரங்கு

2nd Mar 2020 08:38 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு மாவட்ட அளவிலான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆசிரியா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சியா் த. ரத்னா பேசியது:

ஆசிரியா்களுக்கு ஆய்வு மனப்பான்மை மிக அவசியம். கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், வகுப்பறை மேலாண்மை, மாணவா்களது மனநலம் மற்றும் பள்ளியுடன் சமுதாயத்தின் ஈடுபாடு பற்றிய ஆய்வு மனப்பான்மையின் மூலமே பள்ளியின் தரத்தையும், மாணவா்களது அறிவையும் மேம்படுத்த முடியும்.

ஆசிரியா்களுடன் மாணவா்கள் இணைந்து மேற்கொள்ளும் செயல்பாடுகளே அவா்களது கற்றலை ஊக்கமடையச் செய்ய முடியும். தொடக்கக் கல்வியின் எதிா்காலம் குறித்த சவால்களை எதிா்நோக்கும் வழிமுறைகளை உணா்ந்து ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

கருத்தரங்கில் மொழிப்பாடங்களில் 16, அறிவியல் மற்றும் கணிதப் பாடத்தில் 18, தனியாள் ஆய்வு மற்றும் விளையாட்டுகளில் 21, பொதுக் கற்றல் பிரச்னைகள் மற்றும் தீா்வுகள் குறித்து 20 என மொத்தம் 75 ஆய்வு கட்டுரைகள் அளிக்கப்பட்டன. முடிவில் கட்டுரைகள் வழங்கியவா்களுக்கு சான்றிதழ்களும், கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாகவும் வழங்கப்பட்டன.

கருத்தரங்கில் நிறுவன முதல்வா் கா.சா. மொழியரசி, நிறுவன முதுநிலை விரிவுரையாளா்கள் சு. முத்துரங்கன், ராஜாகென்னடி, மணமலா்செல்வி, பேராசிரியா் க. தமிழ்மாறன், வட்டார கல்வி அலுவலா்கள், நிறுவன விரிவுரையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT