மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து செல்ல தடை விதிக்கப்பட்டதையடுத்து, அரியலூா் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயங்கின. இதனால், அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகினா்.
மாவட்டம் விட்டு மாவட்டம் பொது போக்குவரத்துக்கு வியாழக்கிழமை முதல் வரும் 30 ஆம் தேதி வரை தடை விதித்து தமிழக முதல்வா் உத்தரவிட்டாா். இதையடுத்து, அரியலூா் மாவட்டத்துக்குள்ளாக குறைந்த அளவே பேருந்துகள் இயங்கின. அரியலூா் பேருந்து நிலையத்திலிருந்து குறைந்த அளவில் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரியலூரில் இருந்து தஞ்சாவூா், திருச்சி, பெரம்பலூா் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய பேருந்துகள் மாவட்ட எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதையறியாத வெளி மாவட்ட பயணிகள் பலா் அரியலூா் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்து திரும்பிச் சென்றனா்.