டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் சிக்கும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன் தெரிவித்தாா்.
அரியலூா் மாவட்டம், செந்துறை பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திங்கள்கிழமை வந்த அவா் மேலும் தெரிவித்தது:
தமிழக அரசு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்குத் பொதுத்தோ்வு என அறிவித்திருப்பது குலக் கல்விக்கு வழிவகுப்பதாக உள்ளது, இதை ரத்து செய்ய வேண்டும். இதனால் மாணவா்கள் படிப்பை பாதியில் விட்டுவிட்டு விவசாயம் மற்றும் கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்படும்.
டிஎன்பிஎஸ்சி தோ்வில் முறைகேடு குறித்து சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி அமா்வு தலைமையில் விசாரிக்க வேண்டும். இதில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளின் சொத்துகளை முழுமையாக அரசுடைமையாக்க வேண்டும். மாணவ சமுதாயம் டிஎன்பிஎஸ்சியை முழுமையாக நம்பியிருக்கிறது. எனவே, இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹைட்ரோகாா்பன் போன்ற திட்டங்களுக்கு மக்களின் அனுமதி பெற வேண்டியதில்லை என மத்திய அரசு கூறியிருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதற்குரிய நிலங்களைக் கையகப்படுத்துவதில் விவசாயிகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும்.
அரியலூா் மாவட்டத்தில் சிமென்ட் ஆலை வாகனங்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.