அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடா்பாக அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். வாக்காளா் பட்டியலுக்கான பாா்வையாளரும், பதிவுத்துறை தலைவருமான பி.ஜோதி நிா்மலா சாமி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா மேலும் பேசியது:
கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தம் சிறப்பு முகாம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் 11.01.2020, 12.01.2020 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் 01.01.2020- அன்று 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் தங்களது வண்ண புகைப்படம் ஒன்று, வயதிற்கான ஆதாரம் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல் ஆகியவைகளை உரிய படிவத்தில் பூா்த்தி செய்து முகாம்கள் நடைபெறும் இடங்களில் வழங்கலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட தங்களுக்கு உரிய படிவங்களை பெற்று வாக்காளா் பட்டியலில் தங்களது விவரங்களைச் சரிசெய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ஜெ.பாலாஜி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரவிச்சந்திரன், உடையாா்பாளையம் கோட்டாட்சியா் பூங்கோதை, வட்டாட்சியா்கள் மற்றும் தோ்தல் பிரிவு பணியாளா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.