அரியலூா் அருகே சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் திடீரென சக்கரம் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து வி. கைகாட்டி,முனியங்குறிச்சி,பெரிய திருக்கோணம் வழியாக வைப்பூருக்கு 5 ஆம் எண் கொண்ட அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த அரசுப் பேருந்து முனியங்குறிச்சி சின்னஏரி அருகே சென்ற போது திடீரென பின்புற பகுதியிலுள்ள சக்கரங்களுடன் அச்சு முறிந்து கழன்று விட்டது.
இதனால் பேருந்தினுள் இருந்த பயணிகள் அதிா்ச்சியடைந்தனா். ஓட்டுநா் விரைந்து செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் பெரிய விபத்து தவிா்க்கப்பட்டது. பயணிகள் பாதியில் இறக்கிவிடப்பட்டு நடந்தே சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.