அரியலூர்

அரசு சிமென்ட் ஆலை சுரங்கத்துக்கு நிலம் கொடுத்தோா் போராட்டம்

22nd Feb 2020 09:01 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஆனந்தவாடி கிராமத்தில் அரசு சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கத்துக்கு நிலம் கொடுத்தோா் நிரந்தர வேலைக் கேட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூரில் இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலைக்கு ஆனந்தவாடி கிராமத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்துக்கு விவசாயிகளிடமிருந்து சுமாா் 400 ஏக்கா் நிலம் 1982-ம் ஆண்டில் அரசு வாங்கியபோது, நிலம் அளித்தவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ஆலையில் வேலை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வேலை வழங்கப்படாததால் கடந்த சில மாதங்களாக சுண்ணாம்புக்கல் சுரங்கத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனா். இதையடுத்து, கடந்த பிப்.1 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரகத்தில் தொழில்துறை அமைச்சா் எம்.சி. சம்பத் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 50 பேருக்கு தினக்கூலி வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், மீதமுள்ள 70 பேருக்கு வேலை வழங்க வேண்டும். அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆனந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள சுண்ணாம்புக்கல் சுரங்க நுழைவாயில் முன்பு நிலம் கொடுத்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து சென்ற செந்துறை வட்டாட்சியா் தேன்மொழி மற்றும் இரும்புலிக்குறிச்சி போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT