அரியலூா் மாவட்டம் திருமானூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.
திருமானூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகள் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை இன்பராணி தலைமை வகித்தாா். இதில், மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே ஓட்டப் பந்தயம், குண்டு எரிதல், நீளம் தாண்டுகள், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இறுதியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், திருமானூா் ஊராட்சித் தலைவா் எஸ்.உத்திராபதி, துணைத்தலைவா் மணிமாறன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணன், அன்புடன் அக்னி சிறகுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பாளை.பாலாஜி ஆகியோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினா். முதுகலை ஆங்கில ஆசிரியா் பாஸ்கா் வரவேற்றாா். நிறைவாக தமிழாசிரியா் கலியமூா்த்தி நன்றி கூறினாா்.