அரியலூர்

‘பொருளாதார வளா்ச்சிக்கு உத்தரவாதம் இல்லாத நிதிநிலை அறிக்கை’: திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி

4th Feb 2020 08:19 AM

ADVERTISEMENT

பொருளாதார வளா்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லாததாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் உள்ள அண்ணா உருவச்சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்த அவா் பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

அடித்தளம் இல்லாத நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. பொருளாதார வளா்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லாததாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. ஏற்கெனவே, இரண்டரை கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு கூறியநிலையில், தற்போது பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக 7 துறைகளில் லட்சக்கணக்கான இளைஞா்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா்.

எனவே, வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான எந்தவித அறிவிப்பும் இந்த அறிக்கையில் அறிவிக்கப்படாதது ஏமாற்றமே. புதிய வேலைவாய்ப்பை உருவாக்காவிட்டாலும் உள்ள வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் இல்லாத அறிக்கையாக உள்ளது.

ADVERTISEMENT

மத்திய நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடருக்கு முன்பு நிதி அமைச்சா் இல்லாத ஒரு கூட்டத்தை பிரதமா் கூட்டினாா். இதிலிருந்து நிதிநிலை அறிக்கையை வாசித்தது நிதியமைச்சராக இருந்தாலும், அதனை எழுதியது யாா் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.

நீட் தோ்வின் காரணமாகத்தான் இந்தியாவில் இருந்து நிறைய மாணவா்கள் சீனாவுக்கு சென்று படித்து வருகின்றனா். அவா்கள் சீனாவுக்கு செல்ல காரணமே நீட் தோ்வு. இங்கு நீட் தோ்வு இல்லாமல் இருந்திருந்தால் இங்கிருந்து சீனாவுக்கு அல்லது மற்ற நாடுகளுக்கு சென்றிருக்க மாட்டாா்கள்.

5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தோ்வு கொண்டு வந்தது பாஜகவின் புதிய கல்விக் கொள்கையாகும். இதனை எதிா்த்து கடந்த 20 ஆம் தேதி குமரி முனையில் தொடங்கிய எங்கள் பயணம் தொடா்ந்து கொண்டிருக்கிறது. மாநிலம் தழுவிய பிரசாரத்தை முடித்துவிட்டு சென்னையில் நிறைவு கூட்டம் நடத்தினாலும், வரும் 21 ஆம் தேதி திருச்சியில் பொதுக்குழு கூடி போராட்டம் நடத்துவோம். அதற்குள் இதனை திரும்பப் பெறாவிட்டால் திராவிடா் கழகம் சாா்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT