அரியலூா் மாவட்டம், செந்துறை வட்ட வழங்கல் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 28 ஆயிரம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
செந்துறை வருவாய் வட்டத்துக்குட்பட்ட நியாய விலைக் கடை ஊழியா்களுக்கான செந்துறை வட்ட வழங்கல் அலுவலகத்தில் மாதந்தோறும் இறுதி நாளில் நடைபெறும் கூட்டத்தில் ஒவ்வொரு நியாய விலைக் கடையில் இருந்து ரூ.300, 500 என வசூலிக்கப்படுவதாக அரியலூா் மற்றும் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது.
இந்நிலையில்,செந்துறை வட்ட வழங்கல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கூட்டம் தொடங்கியது. அப்போது திடீரென கூட்டத்துக்கு வந்த அரியலூா் லஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு காவல் துணை கண்காணிப்பாளா் சந்திரசேகா் தலைமையிலான போலீஸாா், வட்ட வழங்கல் அலுவலா் பழனிவேலன், வட்ட வழங்கல் ஆய்வாளா் பழனிசாமி ஆகியோரின் அறைகளில் சோதனை செய்தனா். இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.28 ஆயிரத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா்,மேற்கண்ட இருவரிடம் தீவிர விசாரணை செய்கின்றனா்.