அரியலூர்

சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தோருக்கு வேலை வழங்க வேண்டும்: கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

10th Dec 2020 06:47 PM

ADVERTISEMENT

அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தோருக்கு வேலை வழங்க வேண்டும் என சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்க கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

அரியலூர் அடுத்த கயர்லாபாத் கிராமத்தில் இயங்கிவரும் அரசு சிமெண்ட் ஆலைக்கு கல்லங்குறிச்சி பகுதியில் சுண்ணாம்புக் கல் சுரங்கம் உள்ளது. இதனை விரிவாக்கம் செய்வது குறித்து விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் கயர்லாபாத் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்தார். மாவட்ட மாசுக் கட்டுப்பாடு செயற்பொறியாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். விவசாயிகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் பதிவு செய்தனர்.

மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் என்.செங்கமுத்து: அரசு சிமெண்ட் ஆலையில் இயங்கி வரும் பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும். ஆலையில் உள்ள மருத்துவமனையில் பொதுமக்களும் சிகிச்சை பெற அனுமதி அளிக்க வேண்டும். ஆலையின் சுண்ணாம்புக்கல் சுரங்கத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு கல்வி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

விவசாயி தமிழரசன்: ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் வேலையில் அமர்த்துவதை நிறுத்தி, புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாத லாரிகளை கண்டறிந்து உரிய சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை தற்காலிகமாக சில மாதங்கள் தடை செய்ய வேண்டும். ஆலையினை இரவு நேரத்தில் இயக்குவதை நிறுத்த வேண்டும்.

ADVERTISEMENT

சமூக ஆர்வலர் சங்கர்: சுண்ணாம்புக்கல் சுரங்கத்துக்கு நிலங்கள் கையகப்படுத்தும் போது வேலை வழங்கப்படும் என தெரிவித்த ஆலை நிர்வாகம் அதனை இதுவரை முறையாக செய்யவில்லை. கரோனா கால கட்டத்தில் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அதேபோல், சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஆலை நிர்வாகம் இதுவரை எந்தவகையான அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. இந்நிலையில், சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்துக்கு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவது கண்துடைப்பு. அதேபோல், சிமெண்ட் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்.

சமூக ஆர்வலர் தமிழ்களம் இளவரசன்: பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாம் என செய்தி தாள்களில் விளம்பரம் செய்து விட்டு, கூட்டத்துக்கு வருகை தரும் நபர்களை அச்சுருத்தும் வகையில் விசாரிப்பது கண்டிக்கத்தக்கது. அதேபோல், சுரங்க விரிவாக்கம் குறித்த தகவலை 100 க்கும் மேற்பட்ட பக்கத்தில் ஆங்கிலத்தில் வழங்கியிருப்பது மக்களை ஏமாற்றும் வேலை. அனைத்தையும் தமிழில் வழங்க வேண்டும். தற்போது சுரங்கம் தோண்ட உள்ள அருகில் பழமை வாய்ந்த கல்லங்குறிச்சி கோயில் உள்ளதால், இப்பகுதியில் சுரங்கம் தோண்டுவதை தவிர்க்க வேண்டும். சுரங்கத்துக்கு நிலம் கொடுத்தோர் மற்றும் அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு ஆலையில் வேலை வழங்க வேண்டும். 

விவசாயி முருகேசன்: ஆலையில் உள்ள பொது மேலாளர் அடிக்கடி மாற்றப்படுவதால் ஆலை நிர்வாகம் சீர்கெட்டு போயுள்ளது. எனவே, பொது மேலாளரை அடிக்கடி மாற்றுவதை நிறுத்த வேண்டும். தமிழ்ப்பேரரசு கட்சி மாவட்டச் செயலர் முடிமன்னன்: சிமென்ட் ஆலையால் பலதரப்பட்ட மக்களும் காசநோய், தோள் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாதம்தோறும் மாசு நிலவரம் குறித்து தகவல் வெளியிட வேண்டும்.

தொடர்ந்து, உசேனாபாத், கல்லங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலரும் பேசினர்.

Tags : ARIYALUR
ADVERTISEMENT
ADVERTISEMENT