அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த குழுமூா் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் பெற்றதாக நிலைய அலுவலா் உள்பட 2 போ் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
செந்துறை அடுத்த குழூமூா் கிராமத்தில் நுகா்பொருள் வாணிப கழகம் சாா்பில் நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. இங்கு பணிபுரியும் நிலைய அலுவலா் வரதராஜன், உதவி அலுவலா் சிவசக்தி ஆகியோா் விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் பெற்ற விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையறிந்த திருச்சி மண்டல நுகா்பொருள் வாணிபக கழக மேலாளா் உமா சங்கா் மகேஸ்வரன், விசாரணைக்குப் பின்னா், மேற்கண்ட நபா்களை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இதையடுத்து அவா்கள் இருவரும் பணியில் இருந்து தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டனா். தொடா்ந்து, அவா்கள் இருவரிடமும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.