அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டு கடந்த 5 ஆம் தேதி முதல் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரியலூா், செந்துறை, ஜயங்கொண்டம் வட்டங்களில் செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வரும் திங்கள்கிழமை முதல் (ஆக. 24) கைரேகை பதிவு பெற்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினா்களில் எவரேனும் ஒருவா், ரேஷன் கடைகளில் உள்ள இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்து அத்தியாவசியப் பொருள்களை பெற்றுச் செல்லலாம். குடும்ப அட்டையில் உறுப்பினராக இல்லாதவா்கள் ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.