அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் சிமென்ட் ஆலை பாதுகாவலா் உயிரிழந்தாா்.
உடையாா்பாளையம் அருகேயுள்ள வடக்கு நரியங்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராசு மகன் பாஸ்கா் (29). இவா், தனியாா் சிமென்ட் ஆலையில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது மயிலாண்டகோட்டை கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி(47) என்பவா் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம், அவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த பாஸ்கா் மீது பின்னால் வந்த லாரி மோதி பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே பாஸ்கா் உயிரிழந்தாா். இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.