அரியலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

9th Nov 2019 11:30 PM

ADVERTISEMENT

அயோத்தி நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கிய நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் போலீஸாா் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனா்.

அயோத்தியில் சா்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தமானது என்பதுதொடா்பான வழக்கின் தீா்ப்பு, பல ஆண்டுகளுக்குப் பின்னா் உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை வெளியானது.

இதையொட்டி, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உத்தரவின் பேரில், பாடாலூா், மங்களமேடு, குன்னம், அரும்பாவூா், மருவத்தூா், வி.களத்தூா், கை.களத்தூா் உள்ளிட்ட காவல் நிலையங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

குறிப்பாக, பெரம்பலூா் நகரில் வெள்ளிக்கிழமை இரவு முதல் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, துறையூா் சாலை, ஆத்தூா் சாலை, அரியலூா் சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை போலீஸாரும் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனா்.

பாலக்கரை, காமராஜா் வளைவு, 4 சாலை சந்திப்பு, 3 சாலை சந்திப்பு, சங்குப் பேட்டை, ரோவா் வளைவு, கனரா வங்கி, ஆட்சியா் அலுவலகம் ஆகிய பகுதிகளிலும் போலீஸாா் கண்கணிப்புப் பணியை மேற்கொண்டனா். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் மங்களமேடு சரகத் துணைக் கண்காணிப்பாளா் தேவராஜன் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கை, கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

அரியலூா் மாவட்டத்தில் : அரியலூா், மாவட்டம் முழுவதும் 700 போலீஸாா் சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அரியலூா், செந்துறை, ஆண்டிமடம், ஜயங்கொண்டம், திருமானூா், தா.பழூா்,மீன்சுருட்டிஉள்ளிட்ட பகுதிகளிலுள்ள கோயில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தலைமையில், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

அரசியல் தலைவா்களின் சிலைகள், திருவள்ளுவா் சிலைகள் உள்ளிட்டவற்றிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் ரோந்து போன்ற வாகனங்களில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். மாவட்டத்தில் நுழையும் வாகனங்கள் அனைத்தும் எல்லையில் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.

வழக்கம் போல் பேருந்துகள் இயங்கின. மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT