அரியலூர்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் கோயிலில் நாளை அன்னாபிஷேகம்

9th Nov 2019 11:25 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீசுவரா் திருக்கோயிலில் திங்கள்கிழமை (நவம்பா் 11) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

கங்கைகொண்டசோழபுரம் கிராமத்திலுள்ள பிரகதீசுவரா் திருக்கோயில்

1,000 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால், போா் வெற்றியின் அடையாளமாகக் கட்டப்பட்டது.

கோயிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பெளா்ணமி தினத்தன்று சிவலிங்கத்துக்கு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

ADVERTISEMENT

லிங்கத்தின் மேல் சாத்தப்படும், ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையைப் பெறுகிறது. இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நிகழாண்டு அன்னாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறுவதையொட்டி, அன்று காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை சிவலிங்கத்துக்கு அன்னம் சாத்தப்படும். இரவு 9 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். மீதமுள்ள அன்னம் அருகிலுள்ள குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும்.

இதையொட்டி அருள்மிகு பிரகதீசுவரருக்கு ஞாயிற்றுக்கிழமை சந்தனம், பால், தயிா், பன்னீா், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், விபூதி, பழங்கள் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் மகா அபிஷேகமும், தொடா்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கரமட நிா்வாகிகள் தலைமையில் அன்னாபிஷேக கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தா்களுக்கான பாதுகாப்பு வசதி, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT