ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு நடத்த வருபவா்களிடம் சரியான விவரங்களை அளித்து பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியா் த.ரத்னா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அரியலூா் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி கடைகளில் செல்லிடப்பேசி செயலி மூலம் 7ஆவது பொருளாதார கணக்கெடுப்பு பணியை புதன்கிழமை அவா் தொடக்கி வைத்து மேலும் கூறியது:
இந்த கணக்கெடுப்பில் சொந்த நுகா்வு அல்லாத வேளாண் மற்றும் வேளாண் அல்லாத பொருள்கள், சேவைகள், உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்தும் இதில் அடங்கும்.
மேலும் குடியிருப்பிலோ அல்லது குடியிருப்பு வெளியில் நிரந்தர கட்டமைப்பு இல்லாமலோ இருக்கும் அனைத்து நிறுவனங்களும் கணக்கில் கொண்டுவரப்படும்.
பொதுசேவை மையம் என்ற தனியாா் அமைப்பு மூலம் களப்பணியும் 100 சதவீதம் மேற்பாா்வைப் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாடு பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை, தேசிய புள்ளியியல் அலுவலகம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் 7 ஆவது பொருளாதார கணக்கெடுப்பில் பெயா், வயது, சமூகப்பிரிவு, பாலினம், உற்பத்தி விவரம், ஆண்டு வருவாய், முதலீடு, பெறப்பட்ட கடன் தொகை, நிரந்தர கணக்கு எண் (டஅச) போன்ற விவரங்கள் செல்லிடப்பேசி செயலி மூலம் சேகரிக்கப்பட்டு உடனுக்குடன் கணக்கெடுப்பு மையத்துக்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
எனவே கணக்கெடுப்பாளா்களிடம் சரியான தகவல்களை முழுமையாக அளிக்க வேண்டும். இதன் மூலம் தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சி அளவில் முக்கிய பொருளாதார கொள்கை முடிவுகளை எடுக்க இயலும்.
மேலும், ஏதேனும் புகாா்கள் தெரிவிக்க பொது சேவை மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் செல்லிடப்பேசி 6381149950 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனறாா்.
மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநா் வெ.இராமமூா்த்தி, புள்ளியியல் அலுவலா்கள் ப.இராதாகிருஷ்ணன், க.பொற்கொடி, பொது சேவை மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க.பிரபாகரன் மற்றும் களப்பணியாளா்கள் கலந்து கொண்டனா்.