"அதிவேகமாக லாரிகளை ஓட்டுவோரின் உரிமம் பறிமுதல்'

அரியலூர் மாவட்டத்தில் அதிவேகமாக லாரிகளை ஓட்டுவோரின் உரிமத்தைப் பறிமுதல் செய்து அவர்கள்

அரியலூர் மாவட்டத்தில் அதிவேகமாக லாரிகளை ஓட்டுவோரின் உரிமத்தைப் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ.ரா. ஸ்ரீனிவாசன்.
அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைத்து சிமென்ட் ஆலை நிர்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்தது:
இங்குள்ள அனைத்து சிமென்ட் ஆலைகளும் தங்களது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தில் முதலில் சாலைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ரோந்து வாகனத்தை அமைத்து லாரிகள் செல்லும் வேகத்தைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் ஓட்டுநர்களின் உரிமத்தைப் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அவர்கள் எந்த ஒரு நிறுவனத்திலும் பணிபுரியாத வகையில் ஓட்டுநர் உரிமம் முற்றிலுமாக முடக்கி வைக்கப்படும். அதற்காக புதிய சாப்ட்வேர் அமைக்கப்படும். வி.கைகாட்டி நான்கு சாலை சந்திப்பில் ஆல்ட்ரா டெக் சிமென்ட் ஆலை நிர்வாகம் கண்டிப்பாக சிக்னல் விளக்குகள்,கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க வேண்டும். மாவட்டத்தில் பெரும்பாலான லாரி ஓட்டுநர்கள் சீருடை அணியாமல் லாரிகளை இயக்கி வருகின்றனர். இதனை சிமென்ட் ஆலை நிர்வாகத்தினர் கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றார் அவர். 
கூட்டத்தில் வந்திருந்த அனைத்து சிமென்ட் ஆலை நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்டறிந்தார். 
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா,ஜயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் சிமென்ட் ஆலை நிர்வாகிகள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை பொறியாளர்கள், அரியலூர் மற்றும் ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com