அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 15 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்து, குளிர்தாங்கமல் உயிரிந்த தா.பழூரை அடுத்த மதுரா, பாலந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமன், லட்சுமணன் வாரிசுதாரரான அவர்களது தாயாரும் ப.பழனிச்சாமி மனைவியுமான முத்துப்பிரியாவுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலை, திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த அரியலூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த ரா.ஆனந்தபாபுவின் வாரிசுதாரரான அவரது தாயாரும், ராமச்சந்திரன் மனைவியுமான திலோத்தமாவுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலை, கீழகாவட்டாங்குறிச்சியைச் சேர்ந்த மொழிப் போர் தியாகி சீ.செல்லக்கண்ணுவுக்கு இலவச வீட்டு மனை பட்டாவுக்கான ஆணை,12 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் கா.பொற்கொடி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் நா.உமா மகேஸ்வரி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.