அரியலூர்

"பள்ளி, கல்லூரி விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்'

22nd Jul 2019 09:51 AM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்  என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன்.
அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவர் பேசியது:
 மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் அறிந்து கொண்டு, அவர்களின் மனநிலைக்கு ஏற்றார் போல் குற்றங்கள் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு குறித்து எடுத்துக்கூற வேண்டும்.  போக்ஸோ சட்டம்  குறித்து எடுத்துரைத்து,  பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து எடுத்துக்கூற வேண்டும்.பொய்யான தகவல்களை செல்லிடப்பேசி மூலம் பரப்பினால் அவர்களுக்கு  தண்டனை வழங்கப்படும். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது  தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும்.
 குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தவறுகள் நடக்கும் பட்சத்தில் அவசர உதவி எண் 100 அழைக்க வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதைபொருள்கள் விற்பனை செய்யப்பட்டால், அதை கைப்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக  சிறப்புக் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
 அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களும் சாலைப் பாதுகாப்பு  குறித்து தெரிந்திருக்க வேண்டும் என்றார் அவர்.
மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா, ஜயங்கொண்டம் நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் குமார், ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் மணவாளன் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT