ஜயங்கொண்டம் சர்வோதய சங்க அலுவலக வளாகத்தில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த நூற்பு கலைஞர்களுக்கான அதிநவீன தொழில்நுட்பப் பயிற்சி முகாம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது .
இந்த முகாமில், பருத்தி பஞ்சுகளில் இருந்து நூல் நூற்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவற்றை பயன்படுத்தும் விதம் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. ஜயங்கொண்டம், உடையார்பாளையம், செந்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நூற்போர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பயிற்சி நிறைவு விழாவுக்கு திருச்சி வடக்கு சர்வோதய சங்க செயலர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைவர் திருத்தணி செல்வம் முன்னிலை வகித்தார். கதர் கிராமத் தொழில் ஆணைய உதவி இயக்குநர் சித்தார்த்தன் கலந்து கொண்டு, மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் கிராம தொழில்கள் ஆணையம் (கே.வி.ஐ.சி) மூலம் பணிமனை கட்டும் திட்டம், பிரதம மந்திரி காப்பீடு திட்டம், ஊக்கத்தொகை திட்டம், மாநில சேமநலநிதி உதவித் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் பயன்களை எடுத்துரைத்தார்.
பயிற்சி முடித்தவர்கள் அனைவருக்கும், காதி சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டு திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) பொருள் உதவி திட்டத்தின் கீழ் புதுரக அதிநவீன தொழில்நுட்ப ராட்டைகள் வழங்கப்பட்டது.