அரியலூர் அருகேயுள்ள திருக்குளம் ஏரியில் இறந்து கிடக்கும் மீன்களால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அரியலூர் அருகே விளாங்குடி கிராமம் திருச்சி, சிதம்பரம் சாலையோரம் ஒட்டியுள்ளது திருக்குளம் ஏரி. இந்த ஏரியில் மீன்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ஏரியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது, ஏரி மாசடைந்து இருப்பது உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் கடந்த சில நாள்களாக பயன்படுத்தாமல் இருந்து வந்தன. இந்நிலையில், இந்த ஏரியிலுள்ள மீன்கள் அனைத்தும் மர்மமான முறையில் உயிரிழந்து மிதந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அங்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியில் வசிப்போர் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் மூக்கை பொத்திக்கொண்டு வாகனத்தை இயக்கும் அவலமும் இதனால் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த ஏரியில் உயிரிழந்து மிதந்து கிடக்கும் மீன்களை அகற்றி, ஏரியை சுத்தப்படுத்தி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.