அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மாவட்டம் முழுவதும் கடந்த இரு தினங்களாக மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது. இதில் கீழப்பழுவூர், ஜயங்கொண்டம், திருமானூர், தா.பழூர், மீன்சுருட்டி, ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அரியலூரில் 1 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷன நிலை நிலவியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தின் பல கிரமங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலான மழை பெய்தது.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது. மாலை 7 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பரவலான மழை பெய்தது. குறிப்பாக, பெரம்பலூர், திருமாந்துறை, சர்க்கரை ஆலை உள்பட மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால், சாலை ஓரங்களிலும், வடிகால் வாய்க்கால்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பெய்த மழையால் குளிர் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.