அரியலூர் மாவட்டம் செந்துறை, விக்கிரமங்லம்,கீழப்பழுவூர், தூத்தூர் ஆகிய பகுதியில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மேற்கண்ட காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் தலைமை காவலர்கள் கலைச்செல்வன், சின்னதுரை, முதல்நிலை காவலர் செந்தில்குமார், காவலர்கள் தர்மராஜ், சுதாகர், கதிரவன், திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர ரோந்துப் பணி மற்றும் விசாரணை மேற்கொண்டனர். இதில், அரியலூர் கோவில்சீமை பகுதியைச் வீரமுத்து மகன் விஜயபாஸ்கர்(39), ஏலாக்குறிச்சி சுப்பிரமணியன் கோயில் தெருவைச் சேர்ந்த சுதாகர் மகன் சுரேஷ் (19) ஆகிய இருவர் மேற்கண்ட பகுதியில் தொடர் திருட்டு, வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை திங்கள்கிழமை கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 13 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர். போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பாராட்டினர்.