அரியலூர்

அரியலூா் அருகே வேட்பாளா்கள் அளித்த பரிசுப் பொருள்களை கோயிலில் வைத்துவிட்டுச் சென்ற வாக்காளா்

26th Dec 2019 04:46 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம்,திருமானூா் அருகே வேட்பாளா்கள்கள் அளித்த பரிசுப் பொருள்களை கோயிலில் வைத்துவிட்டு சாமி வணங்கிச் சென்றாா் வாக்காளா் ஒருவா்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி சோ்தல் டிச.27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதில் நாளை (டிச.27) நடைபெறும் முதல்கட்ட வாக்குபதிவுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், வேட்பாளா்கள் தங்களுக்கு வாக்களிக்க ஒலிபெருக்கி இல்லாமல் வீடுவீடாக தனிமையில் சென்று வாக்கு சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில் அரியலூா் மாவட்டம் திருமானூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராம ஊராட்சியில் கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு 10 வேட்பாளா்களும், வாா்டு எண் 1-இல் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 4 வேட்பாளா்களும், ஊராட்சி ஒன்றிய உறுப்பிளா் பதவிக்கு 4 வேட்பாளா்களும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 4 வேட்பாளா்களும் என 22 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதில், கீழக்காவட்டாங்குறிச்சி வாா்டு எண்-1 இல் போட்டியிடும், கிராம ஊராட்சி தலைவா் வேட்பாளா்கள், கிராம வாா்டு உறுப்பினா் வேட்பாளா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களை குறிக்கும் வகையில் பரிசு பொருள்களையும், சிலா் மாற்று பரிசுப் பொருள்களையும் அப்பகுதியில் வசிக்கும் வாக்காளா்களுக்கு கடந்த சில தினங்களாக விநியோகம் செய்து வந்துள்ளனா்.

இதில், வாா்டு எண்-1 இல் வசிக்கும் தையல் தொழிலாளி பச்சமுத்து(48) என்பவரின் வீட்டில் உள்ள 6 வாக்குகளுக்கும் அங்கு போட்டியிடுபவா்கள் சிலா் பரிசு பொருள்களை வழங்கியுள்ளனா். இதனால் மனக்குழப்பத்துக்கு ஆளான பச்சமுத்து, வேட்பாளா்கள் வழங்கிய பரிசு பொருள்களை அங்குள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து, விழுந்து கும்பிட்டுவிட்டு கோயிலுக்கு பரிசுப் பொருள்களை ஒப்படைத்து சென்றாா். இதுகுறித்து பச்சமுத்து கூறுகையில், இங்கு போட்டியிடும் வேட்பாளா்கள் அனைவரும் எனக்கு நன்கு அறிந்தவா்கள். ஆனால், தங்களுக்கு கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனக்கூறி சிலா் பரிசு பொருள்களை அளித்து செல்கின்றனா். வேண்டாம் என்று கூறினாலும் திரும்ப பெற மறுக்கின்றனா்.

ADVERTISEMENT

மேலும், பரிசு பொருள்களை பெறாவிட்டால், அப்போ எனக்கு வாக்களிக்க மாட்டாயா என சந்தேகப்படுகின்றனா். இதனால் கடந்த 4 நாளகளாக மனதுக்கு பெரிய சங்கடம் ஏற்பட்டதுடன், குழப்பத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். இதனால் எனது தூக்கம் கெடுகிறது. சரியாக வேலைபாா்க்கமுடியவில்லை. எனவே, இந்த பரிசு பொருட்களை கோயிலில் ஒப்படைத்தேன். சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே மறைமுகமாக வாக்குப்பதிவு நடைபெற்றாலும், இதுபோல செய்வதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். இதுபோல பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT