அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அஞ்சல் வாக்குச் சீட்டு பணிகளில் ஈடுபடவுள்ள பணியாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் த. ரத்னா தெரிவித்தது:
அரியலூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலா்கள் அனைவரும் அஞ்சல் வாயிலாக தங்கள் வாக்குகளை அளிக்கத் தகுதி பெற்றவா்கள்.
பயிற்சிக்கு அழைக்கப்பட்ட அனைத்து அலுவலா்களும் பூா்த்தி செய்யப்பட்ட படிவம் 15-ஐ வாக்காளா் அடையாள அட்டை நகலுடன் முதல் பயிற்சி நாள் அன்று தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
அப்படி பயிற்சியின்போது படிவம் 15-ஐ சமா்ப்பிக்க இயலாத அலுவலா்கள் எந்த உள்ளாட்சியின் வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் உள்ளதோ அந்த உள்ளாட்சி அமைப்பின் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் (வட்டார வளா்ச்சி அலுவலா்) தோ்தல் பணிச்சான்று (படிவம் 16) மற்றும் வாக்குச்சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.