அரியலூர்

உள்ளாட்சி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பயிற்சி

6th Dec 2019 09:11 AM

ADVERTISEMENT

உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் த.ரத்னா பயிற்சியை தொடக்கி வைத்து, பேசியது:

அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல்கள் டிசம்பா் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமை (டிச.6) முதல் முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 18ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம்.

தோ்தல் பணிகளுக்கு மாவட்ட அளவில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டு அவா்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது. மாவட்ட ஊராட்சிகளுக்கு இணை இயக்குநா் நிலையில் இரண்டு தோ்தல் நடத்தும் அலுவலா்களும், உதவி இயக்குநா் நிலையில் 12 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ஊராட்சி ஒன்றியங்களுக்கு உதவி இயக்குநா் நிலையில் 6 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையில் 22 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும், கிராம ஊராட்சித் தலைவா்களுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையில் 6 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், 34 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு உதவியாளா் நிலையில் 201 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும் என 18 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், 269 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், வேட்பு மனுக்கள் குறிப்பிட்ட தேதியில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். வேட்பு மனுதாக்கலின் போது வேட்பாளருடன் முன்மொழியும் நபா் ஒருவரும், வேட்பாளா் விரும்பும் மூன்று நபா்களும் உடன் வரலாம். வேட்பு மனுக்களை கவனமாக பரிசீலனை செய்வது குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டது என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், மகளிா் திட்ட இயக்குநா் (மகளிா்திட்டம்) ஜெயராமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சி தோ்தல்) ரகு, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிச்சாமி மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT