அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாணவர்கள், பெற்றோர் புதன்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜயங்கொண்டம் அருகேயுள் கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி யில் சுமார் 400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாகக் கூறி மாணவர்களுடன், பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இதுகுறித்து பலமுறை கல்வித்துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறினர்.
தகவலறிந்து வந்த தா. பழூர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.